முதியவர் கொலை வழக்கு: ‘சாட்சிகளை திரட்டி வந்து மிரட்டியதால் தீர்த்து கட்டினேன்’

முதியவர் கொலை வழக்கு: ‘சாட்சிகளை திரட்டி வந்து மிரட்டியதால் தீர்த்து கட்டினேன்’ கைதான வாலிபர் பரபரப்பு வாக்கு மூலம்

Update: 2017-06-13 23:06 GMT

புதுச்சேரி,

புதுவையில் முதியவர் கொலை வழக்கில் கைதான வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். சாட்சிகளை திரட்டி வந்து மிரட்டியதால் தீர்த்து கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மகள் கொலையில் சாட்சி

புதுச்சேரி முருங்கப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்தவர் குமார் என்ற கலியபெருமாள்(வயது 60). ஓய்வு பெற்ற ரோடியர் மில் ஊழியர். இவரது மகள் சக்திபிரியா. இவருக்கும் முருங்கப்பாக்கம் பேட் பகுதியை சேர்ந்த அமலன் என்ற லூர்துநாதன்(32) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அமலன் சம்பவத்தன்று சக்திபிரியாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

இந்த வழக்கு புதுவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சக்திபிரியாவின் தந்தை கலியபெருமாள் முக்கிய சாட்சியாக இருந்தார்.

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலனுக்கு எதிராக கலியபெருமாள் சாட்சி கூறினார். அத்துடன் இந்த கொலை வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு இருந்த மற்றவர்களையும் அவர் அழைத்து வந்து அமலனுக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்ததாக தெரிகிறது.

கழுத்தை அறுத்து கொலை

இது அமலனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் கோர்ட்டு வளாகத்திலேயே அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கலியபெருமாள் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த அமலன், மறைத்து வைத்திருந்த கத்தியால் கலியபெருமாளின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்று இரவில் அமலனை கைது செய்தனர்.

எதிராக சாட்சி சொன்னார்

அப்போது அமலன் போலீசாரிடம் பரபரப்பான வாக்குமூலம் அளித்தார்.அதன் விவரம் வருமாறு;–

2013–ம் ஆண்டு எனக்கும் சக்திபிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவர் என்னை விட்டு விலகி சென்றார். என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன். இந்த கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக அவரது தந்தை கலியபெருமாள் இருந்தார்.

கடந்த வாரம் இந்த கொலை வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கலியபெருமாள் எனக்கு எதிராக சாட்சி சொன்னார்.மேலும் எனக்கு எதிராக பலர் சாட்சி கூறினர். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கோர்ட்டுக்கு அழைத்து வந்து எனக்கு எதிராக கலியபெருமாள் சாட்சி சொல்ல வைத்தார். வழக்கு விசாரணை முடிவடைந்து வெளியே வந்த போது அவர் என்னை ஆபாசமாக திட்டினார். உன்னை ஒழித்து கட்டாமல் விடமாட்டேன் என்று மிரட்டி சவால் விட்டார்.

போலீசார் கைது செய்தனர்

இதனால் ஆத்திரமடைந்த நான் கலியபெருமாளை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். இதற்காக அவரது வீட்டுக்கு சென்றேன். என்னை பார்த்ததும் அவர் என்னை தாக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட நான் கத்தியால் அவரது கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். சில மணி நேரத்தில் அவர் இறந்து விட்டார். இந்த நிலையில் நான் முதலியார்பேட்டை 100 அடி ரோட்டில் உள்ள ரெயில்வே பாலம் அருகில் பதுங்கி இருந்தேன். போலீசார் என்னை மடக்கி கைது செய்தனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அமலன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் தடுப்பு சட்டம்

கலியபெருமாள் கொலை வழக்கில் அமலனை 24 மணி நேரத்தில் கைது செய்த தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம், முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்–இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது, ‘‘கலியபெருமாள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அமலனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் அனுமதி அளித்த உடன் அமலன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்யப்படுவார்’’ என்றார்.

மேலும் செய்திகள்