ரேஷன்கடை ஊழியர்கள் 2–வது நாளாக பணிகளை புறக்கணித்தனர்
பேச்சுவார்த்தையில் இழுபறி: ரேஷன்கடை ஊழியர்கள் 2–வது நாளாக பணிகளை புறக்கணித்தனர்
புதுச்சேரி,
சம்பளம் வழங்கக்கோரி ரேஷன்கடை ஊழியர்கள் நேற்று 2–வது நாளாக பணிகளை புறக்கணித்தனர். பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால் இன்றும் போராட்டம் நீடிக்கிறது.
பணிகளை புறக்கணித்தனர்புதுவையில் 318 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் சுமார் 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 13 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும், சம்பளத்தை உடனே வழங்க கோரியும் கடந்த 7–ந் தேதி முதல் ஊழியர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கள் பணிகளை புறக்கணித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நேற்று 2–வது நாளாக பணிகளை புறக்கணித்து தலைமை தபால் நிலையம் அருகே ஒன்று கூடினர்.
உடன்பாடு ஏற்படவில்லைரேஷன்கடை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர் கந்தசாமி, குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் பிரியதர்ஷினி, கூட்டுறவு துறை பதிவாளர் சிவக்குமார், அரசு ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி, ரேஷன்கடை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் போது ஊழியர்கள் நிலுவையில் உள்ள 13 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இழுபறி நீடித்ததால் தொடர்ந்து ரேஷன்கடை ஊழியர்கள் இன்றும்(புதன்கிழமை) போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.