சேலம் அருகே பஸ்சில் கற்பழிப்பு வழக்கு: மேட்டூர் கோர்ட்டில் சிறுமி உள்பட 3 பேர் ரகசிய வாக்குமூலம்

சேலம் அருகே பஸ்சில் சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக மேட்டூர் கோர்ட்டில் அந்த சிறுமி உள்பட 3 பேர் ரகசிய வாக்குமூலம் அளித்தனர்.

Update: 2017-06-13 22:57 GMT
மேட்டூர்,

சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஓமலூர் அருகே உள்ள நாரணம்பாளையம் கிராமத்துக்கு கடந்த 5-ந் தேதி ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்சில் சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 31) டிரைவராகவும், வாழப்பாடி முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் (22) கண்டக்டராகவும் இருந்தனர். மாற்று டிரைவராக சேலம் அதிகாரப்பட்டியை சேர்ந்த முருகன் (35) என்பவரும் இருந்தார்.
இந்த பஸ் இரவில் நாரணம்பாளையத்தை வந்தடைந்தது. அப்போது பஸ்சில் இருந்து பயணிகள் இறங்கி விட்டனர். ஆனால் சேலம் அழகாபுரத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி மட்டும் பஸ்சில் இருந்துள்ளார். அந்த சிறுமியை மணிவண்ணன், பெருமாள், முருகன் ஆகியோர் பஸ்சில் வைத்து கற்பழித்ததாக கூறப்படுகிறது.

ரகசிய வாக்குமூலம்

இது தொடர்பாக ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாள், மணிவண்ணன், முருகன் உள்பட 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மகளிர் போலீசார் மனுத்தாக்கல் செய்ததன்பேரில் சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம் பெற மேட்டூர் 2-வது குற்றவியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
அதன்பேரில், மேட்டூர் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டு கன்னிகாதேவியிடம் நேற்று சிறுமி மற்றும் அவருடைய தாய் உள்பட 3 பேர் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். இந்த வாக்குமூலம் சேலம் கோர்ட்டில் வழங்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்