ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படும்

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படும் இயக்குனர் சீமான் பேட்டி

Update: 2017-06-13 23:00 GMT

ராமநாதபுரம்,

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் மத்திய அரசு தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் என்று ராமநாதபுரத்தில் சீமான் தெரிவித்தார்.

குறுக்கு விசாரணை

ராமேசுவரத்தில் கடந்த 2008–ம் ஆண்டு தமிழ்த்திரையுலகம் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூ பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். ராமேசுவரம் கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, விசாரணை பின்னர் ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று ராமநாதபுரம் கோர்ட்டில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். கூடுதல் மாவட்ட கோர்ட்டு நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. ஏற்கனவே முதல் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் நேற்று சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. சம்பவத்தன்று அந்த பகுதியில் பணியில் இருந்த கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் தியாகராஜன், போலீஸ் சுருக்கெழுத்தர் செல்லபாண்டியன், கிராம உதவியாளர் கருப்பையா ஆகியோரிடம் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரின் வழக்கறிஞர் சோமசுந்தரம் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அடுத்த கட்ட சாட்சிகளின் குறுக்கு விசாரணைக்காக வழக்கை வருகிற 19–ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார்.

அவரவர் விருப்பம்

இதன் பின்னர் இயக்குனர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:– மதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள நிலையில், தான் எவ்வளவு தொகை வாங்கினார் என்பதை தெரிவிக்கவில்லை. அதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும். அதே வேளையில் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன்அன்சாரி நிச்சயம் யாரிடமும் பணம் வாங்கவில்லை. அதனை அவரிடம் உறுதி செய்துள்ளேன்.

சரவணனின் கருத்துக்கு, தமீமுன் அன்சாரி தவிர வேறு யாரும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் அ.தி.மு.க. கட்சியால் எந்த பிரச்சினையும் இல்லை. அந்த கட்சியே பிரச்சினையாக தான் உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்பது அவரவர் விருப்பம். ஆனால், எங்களின் கருத்து இந்த மண்ணை ஆளும் உரிமை தமிழருக்கு மட்டுமே உள்ளது.

தமிழகத்தை பா.ஜ.க.தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 2019 வரை தேர்தல் வர வாய்ப்பில்லை. பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும் வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு மத்திய பா.ஜ.க. அரசு தமிழக அரசை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை அமல் படுத்தும். அதன்பின்னர் நேரடியாக பா.ஜ.க. தன் ஆளுமையின் கீழ் தமிழகத்தை கொண்டுவந்து எங்களை போன்ற அவர்களுக்கு எதிரானவர்களை நசுக்கும் வேலையை செய்யும். இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்