போலீசார் தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
போலீசார் தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி திருப்பூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றியதால் பரபரப்பு
திருப்பூர்,
திருப்பூரில் போலீசார் தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி செல்போன் கோபுரத்தில் ஏறிய வாலிபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செல்போன் கோபுரத்தில் ஏறிய வாலிபர்திருப்பூர்–காங்கேயம் ரோடு புதூர் மெயின் ரோடு புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் முரளி(வயது 26). இவர் மீது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், திருச்சி, அரியலூர் போலீஸ் நிலையங்களிலும் குற்ற வழக்குகள் உள்ளதாகவும் தெரிகிறது. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் புதுக்காடு பகுதியில் உள்ள 40 அடி உயர செல்போன் கோபுரத்தில் முரளி திடீரென்று ஏறினார். சமீபத்தில் போலீசார் தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகவும், திருந்தி வாழ நினைக்கும் தன்னை போலீசார் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் வீட்டுக்கு வந்து அழைத்து செல்வதாகவும், இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்வதாகவும் முரளி கூறினார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கி வருமாறு அவர்கள் கூறினார்கள். ஆனால் முரளி கேட்கவில்லை.
தீக்குளிப்பதாக மிரட்டல்சம்பவம் பற்றி அறிந்ததும் முரளியின் பெற்றோர் அங்கு வந்தனர். அவர்கள் செல்போன் மூலமாக முரளியிடம் பேசி கீழே இறங்கி வருமாறு கூறினார்கள். ஆனாலும் முரளி கேட்கவில்லை. நேரம் செல்லச்செல்ல அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் மணி, தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நெல்சன், தெற்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வந்து முரளியிடம் செல்போன் மூலமாக பேசினார்கள். சம்பவ இடத்துக்கு திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்களும் வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் செல்போன் கோபுரத்தில் ஏற முயன்றனர். அப்போது முரளி தான் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து தலை மற்றும் உடலில் ஊற்றினார். ‘மேலே யாராவது ஏறி வந்தால் தீக்குளிப்பேன்’ என்று மிரட்டல் விடுத்தார். பின்னர் தெற்கு தாசில்தார், உதவி கமிஷனர் ஆகியோர் செல்போன் மூலமாக முரளியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வருமாறும், போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்குகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து முரளி கீழே இறங்கி வர சம்மதித்தார்.
2 மணி நேரம் பரபரப்புஅப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முரளியை கோபுரத்தின் மேலே இருக்கும்படி தெரிவித்து விட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து ஏறிச்சென்று கயிறு கட்டி முரளியை மாலை 6 மணி அளவில் கீழே இறக்கி கொண்டு வந்தனர். பின்னர் 108 ஆம்புலன்சு கொண்டு வரப்பட்டு முரளியை ஏற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.