துறையூர் அருகே நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் பரிதாப சாவு

துறையூர் அருகே நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் பரிதாபமாக செத்தது.

Update: 2017-06-13 22:45 GMT

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகில் உள்ளது பச்சைமலை. இங்கு அதிக அளவில் புள்ளிமான்கள் மற்றும் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. பச்சைமலையின் தொடர்ச்சியில் உள்ள மலை குறிச்சிமலை. இந்த மலை துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக துறையூரில் இருந்து கோட்டாத்தூர் செல்லும் சாலையில் வனகாப்பு காடு உள்ளது. இந்த காப்பு காட்டில் மான்கள் மற்றும் காட்டு எருமைகள், காட்டுப்பன்றிகள் அதிக அளவில் உள்ளன.

தற்போது பருவமழை பெய்யாததால் துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதி கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் மற்றும் ஆங்காங்கே உள்ள குளங்கள் ஆகியவற்றில் தண்ணீர் இல்லை. சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் துறையூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீர் குடிப்பதற்காக வனகாப்பு கட்டில் உள்ள விலங்குகள் அங்கு வந்து செல்வது வழக்கம். இதேபோல் வனகாப்பு காட்டு பகுதியில் இருந்து 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று நேற்று கோட்டாத்தூர் செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை குடிப்பதற்காக வந்தது.

நாய்கள் கடித்து குதறின

இதை கண்ட நாய்கள் புள்ளிமானை துரத்தி துரத்தி கடித்தன. இதனால் புள்ளிமான் படுகாயம் அடைந்து ஓட முடியாமல் கீழே விழுந்தது. இதையடுத்து நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறியதில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இதை பார்த்த அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்படி துறையூர் வனத்துறை அதிகாரி ரவிகிருஷ்ணன் தலைமையில் வனவர் கருணாநிதி, வனகாப்பாளர் ராஜாஜி, ஜெயகுமார், வனகாவலர் ராஜூ ஆகியோர் விரைந்து வந்து புள்ளிமானின் உடலை கைப்பற்றினார்கள். பின்னர் கால்நடை டாக்டர் தமிழரசி அந்த இடத்திலேயே மானின் உடலை பரிசோதனை செய்தார். பின்னர் குழிதோண்டி புள்ளிமானை புதைத்தனர்.

மேலும் செய்திகள்