டிராக்டரில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு: பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

பெருந்துறை அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2017-06-12 23:00 GMT
பெருந்துறை,

ஈரோடு அருகே உள்ள நசியனூர் கதிரம்பட்டி கிராமத்தை சோந்தவர் முத்தான் (வயது 55). தொழிலாளி. அவருடைய மனைவி அருக்காணி. முத்தான் கடந்த மாதம் 1–ந் தேதி அன்று பெருந்துறை அருகே உள்ள கூரப்பாளையம் பகுதியில் உள்ள பூபதி என்பவரது கிணற்றில் மணல் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். கிணற்றில் இருந்து வாளியில் மணல் அள்ளி அதை டிராக்டரில் உட்கார்ந்து டிரெய்லரில் போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது டிராக்டர் திடீரென நகர்ந்ததால் அதில் இருந்த முத்தான் தவறி கீழே விழுந்தார்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்தான் கடந்த மாதம் 11–ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

மனைவி போலீசில் புகார்


இதைத்தொடர்ந்து அவரது உடலை அவரது உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல் கதிரம்பட்டியில் உள்ள சுடுகாட்டில் புதைத்துவிட்டனர்.

இந்த நிலையில் முத்தானின் மனைவி அருக்காணி பெருந்துறை போலீசில் கடந்த 2–ந் தேதி ஒரு புகார் கொடுத்தார். அந்தப்புகாரில் ‘எனது கணவர் முத்தானின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

பிணம் தோண்டி எடுப்பு


அதைத்தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து டாக்டர் பேரானந்தம் தலைமையிலான டாக்டர்கள் நேற்று மதியம் 1 மணி அளவில் கதிரம்பட்டி சுடுகாட்டுக்கு சென்றனர். பின்னர் பெருந்துறை போலீசார், ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார் முன்னிலையில் முத்தானின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு முத்தானின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, ‘பிரேத பரிசோதனை செய்யப்பட்ட முத்தானின் உடற்கூறுகள் சோதனைக்கு அனுப்பப்படும். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் எப்படி இறந்தார்? என்று தெரியவரும்’ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்