குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் நூதன போராட்டம்

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆற்றில் இறங்கி ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-06-12 22:45 GMT
வாய்மேடு,

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் கடந்த 6 ஆண்டுகளாக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இந்த நிலையில் தமிழக டெல்டா மாவட்டங் களில் தொடர்ந்து 6-வது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்து போனதையொட்டி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நாகை மாவட்டம் தலை ஞாயிறை அடுத்த ஆலங்குடி அரிச்சந்திரா ஆற்றில் விவ சாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி குறுவை சாகுபடிக்கு 6-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொது செயலாளர் தனபாலன் தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில் காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி குறுவை சாகுபடிக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்

இதேபோல் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் மதகு அருகே ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடாததை கண்டித்தும், குறுவை சாகுபடிக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் விவசாயிகள் ஆற்றில் இறங்கி ஒப்பாரிவைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி தமிழ்தேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

இதில் தமிழக புரட்சிகர விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்