முத்திரை கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 16-ந் தேதி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

முத்திரை கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 16-ந் தேதி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் கூறினார்.

Update: 2017-06-12 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை பதிவு செய்வது தொடர்பான சட்டவிதிகள் மற்றும் கோர்ட்டு முத்திரை கட்டண உயர்வு குறித்து தமிழக அமைச்சர்களை சந்தித்து எங்களது கோரிக்கைகளை தெரிவிக்க 3 மாதங்களாக காத்திருந்தோம். அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பிறப்பு, இறப்பு தொடர்பான சட்டவிதிகள், கோர்ட்டு முத்திரை கட்டண உயர்வு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி(வெள்ளிக்கிழமை) கோர்ட்டு புறக்கணிப்பு செய்வதுடன் தஞ்சை வக்கீல்கள் சங்கத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

அதன்பின்னரும் தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற 24-ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும். கீழ்கோர்ட்டு நீதிபதிகள் பணி நியமனத்துக்கு நீட் தேர்வு போன்று ஒரே மாதிரியான தேர்வு நடத்துவது குறித்து மாநிலஅரசுகளிடம் மத்தியஅரசு கருத்து கேட்டுள்ளது. இந்த தேர்வால் இளம் வக்கீல்கள் பாதிக்கப்படுவார்கள். பிற்படுத்தப்பட்ட வக்கீல்கள், பெண் வக்கீல்களுக்கான இடஒதுக்கீடு தடைபட்டு விடும். எனவே இந்த தேர்வு தேவையற்றது. மத்தியஅரசின் யோசனையை மாநிலஅரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

சேமநல நிதி

வக்கீல்களுக்கான சேமநல நிதி சம்பந்தமாக வக்கீல்கள் செலுத்த வேண்டிய ரூ.32 கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கோர்ட்டு கட்டணம், கோர்ட்டினால் விதிக்கப்படும் அபராதம் ஆகியவற்றில் இருந்து 20 சதவீதத்தை வக்கீல்கள் சேமநல நிதியில் சேர்க்க வேண்டும். அல்லது தமிழகஅரசு வக்கீல்கள் சங்கத்திற்கு ரூ.4 கோடி வழங்கி வருவதற்கு பதிலாக ரூ.20 கோடி வழங்க வேண்டும். அதில் இருந்து இறந்த வக்கீல்கள் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வழங்கிடவும், இளம் வக்கீல்களுக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கிடவும் தமிழகஅரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விபத்து வழக்குகள் தொடர்பாக இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தத்தை கண்டிப்பதுடன், அவற்றை மத்தியஅரசு திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்