2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை கலெக்டரிடம் முறையீடு

சாத்தூர் அருகே உள்ள எம்.சொக்கலிங்கா புரத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பஸ் ஏறி பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக கலெக்டரிடம் முறையிட்டனர்.

Update: 2017-06-12 23:00 GMT
விருதுநகர்,

சாத்தூர் அருகே உள்ள நல்லமுத்தம்பட்டி பஞ்சாயத்தில் உள்ள கிராமம் எம்.சொக்கலிங்காபுரம். இந்த கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் பஸ்கள் அந்த கிராமத்துக்கு செல்வது இல்லை. இதனால் அந்த கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து முள்ளிசெவல் கிராமத்துக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏறி உப்பத்தூரில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலையில் மாணவ, மாணவிகள் உள்ளனர். இதனால் தினசரி அவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

முறையீடு

இந்த மாணவ, மாணவிகள் நேற்று பெற்றோருடன் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரிடம் பள்ளிக்கு பஸ்சில் செல்ல வசதியாக தங்கள் கிராமத்துக்கு சாலை வசதி செய்து தருமாறு கோரினர். ஏற்கனவே இந்த சாலை சீரமைப்புக்கு ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் சாலை சீரமைப்பு பணி தொடங்கப்படவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இது தவிர தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாத நிலை உள்ளதால் கிராமத்தை நேரடியாக ஆய்வு செய்து கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்