பதுக்கி வைத்திருந்த 60 யூனிட் மணல் பறிமுதல் கனிம வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

வேலூரில் தனியார் இடத்தில் கடத்தி பதுக்கி வைத்திருந்த 60 யூனிட் மணலை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-06-12 22:45 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் இருந்து தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருகிறது. இதனை தடுக்க வருவாய்த்துறையினரும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் ரங்காபுரத்தை அடுத்த மூலக்கொல்லையில் உள்ள ஒரு தனியார் இடத்தில் ஆற்று மணல் அதிகளவு குவித்து வைக்கப்பட்டு உள்ளதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கனிம வளத்துறை துணை இயக்குனர் தீபா தலைமையில், வருவாய் ஆய்வாளர் இளையராஜா மற்றும் அதிகாரிகள் மூலக்கொல்லை பகுதிக்கு சென்றனர். அங்கு சோதனை நடத்தியதில், தனியார் இடத்தில் 60 யூனிட் மணல் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

60 யூனிட் மணல் பறிமுதல்

இதையடுத்து அதிகாரிகள் 60 யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர். மணலை கடத்தி பதுக்கியது யார்? என கனிம வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மணலை கனிம வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் பொதுப்பணித்துறை மூலம் அந்த மணல் ஏலம் விடப்பட்டது. ஒரு யூனிட் மணல் ரூ.2 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்