யானை வேட்டையை தடுக்கும் கருவி!

யானைகளை வேட்டையாடுபவர்களிடம் இருந்து யானைகளை பாதுகாக்கும் வகையில் கூடுதல் கண்காணிப்பு கருவி அறிமுகமாகி உள்ளது.

Update: 2017-06-12 08:53 GMT
காட்டு யானைகளை வேட்டையாடும் கும்பல் உலகம் முழுக்க இருக்கிறது. இதனால் யானைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. யானைகள், காட்டு உயிரினங்களுக்கு பல வகையில் நன்மை செய்யும் விலங்காகும். அவற்றின் அழிவு மற்ற உயிரினங்களையும் வெகுவாக பாதிக்கும்.

யானைகளை கணக்கெடுப்பதற்காக விஞ்ஞானிகள், ஜி.பி.எஸ். நுட்பத்துடன்கூடிய சிறுபட்டைகளை யானைகளின் உடலில் பொருத்துவார்கள். இந்தியாவிலும் ஏறத்தாழ அனைத்து யானைகளுக்கும் இந்த கழுத்துப்பட்டைகள் அணிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் யானைகள் காட்டிற்குள் எங்கு இருக்கிறது, எங்கு செல்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். 

தற்போது தந்தம் மற்றும் தோலுக்காக யானைகளை வேட்டையாடுபவர்களிடம் இருந்து யானைகளை பாதுகாக்கும் வகையில் கூடுதல் கண்காணிப்பு கருவி அறிமுகமாகி உள்ளது. இவை யானைகள் சுடப்பட்டால் உடனே எச்சரிக்கும். வைபர்   (WIPER)   எனப்படும் இந்த நுட்பத்தை ஜி.பி.எஸ்.கருவிகளுடன் இணைக்க முடியும். அமெரிக்காவின் வான்டர்பில்ட் பல்கலைக்கழகம் மற்றும் கொலராடோ மாகாண பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த கருவி தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த சென்சார் கருவியானது சத்தமின்றி சுடும் துப்பாக்கிகளின் அதிர்வலைகளைக்கூட கண்டுணர்ந்து எச்சரிக்கும். தகவல் உடனடியாக வனத்துறை அலுவலகங்களுக்கு கடத்தப்படுவதால், வன அலுவலர்கள் துரிதமாக தடுப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட முடியும். இத்துடன் இணைந்து செயல்படும் வகையில் குட்டி ஹெலிகாப்டர்களான டிரோன்களும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.

இவை யானைகள் சுடப்பட்டதும் சம்பவ இடத்தை நோக்கி விரைவதுடன், வேட்டைக்காரர்கள் செல்லும் வழிகளையும் பின் தொடர்ந்து வன அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுக்கும். அதனால் வேட்டையர்கள் தப்புவது முற்றிலும் தடுக்கப்படும். 

50 மீட்டர் சுற்றளவுக்கு இந்த கருவி வேலை செய்யும் என்பதால் ஒரு யானைக்கூட்டத்திற்கு ஒன்றிரண்டு கருவிகளை பொருத்தினாலே போதுமானது. இந்திய காட்டு யானைகள் உள்பட பல்வேறு நாடுகளின் யானைகளை பாதுகாக்க இந்த கருவி பயன்படுத்தப்பட உள்ளது. நிலவுலகின் பிரமாண்ட உயிரினத்தை காப்பாற்ற சிறு கருவி வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும் செய்திகள்