2-வது மனைவி குத்திக் கொலை “பேன்சி” கடைக்காரர் போலீசில் சரண்

தலைவாசல் அருகே கத்தியால் குத்தி 2-வது மனைவியை கொலை செய்த “பேன்சி” கடைக்காரர் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-06-11 23:24 GMT
தலைவாசல்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 51). “பேன்சி‘ கடை வைத்து நடத்தி வருகிறார். செல்வராஜிக்கு அவருடைய முதல் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுக்கொண்டார். இதற்கிடையில் செல்வராஜ் தாரா (41) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 13 வயதில் மிருதுவன் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செல்வராஜ், தாரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தனித்தனியாக பிரிந்து வசித்து வந்தனர். வீரகனூரில் தாரா அழகு நிலையம் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் தாரா வீட்டிற்கு செல்வராஜ் சென்றார்.

கத்திக்குத்து

இதைத்தொடர்ந்து அங்கு கணவன், மனைவி இடையே திடீரென மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாராவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அலறல் சத்தத்துடன் தாரா சரிந்து விழுந்தார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர்.

பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் வீரகனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாராவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

போலீசில் சரண்

பின்னர் தாரா மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தாரா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மனைவி இறந்ததை அறிந்த செல்வராஜ் வீரகனூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செல்வராஜ் தாராவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைவாசல் அருகே பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்