வில்லியனூரில், முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி 2 பேர் கைது; ரவுடிக்கு வலைவீச்சு

முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-06-11 23:01 GMT
வில்லியனூர்,

வில்லியனூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் பழனிநாதன்.
(வயது33).இவருக்கும் அரசூரை சேர்ந்த ரவுடி பாம்பு பழனி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனிநாதனின் தாய் தனது வீட்டு வாசலில் நின்று குரைத்துக்கொண்டு இருந்த நாயை அதட்டி விரட்டினார்.

அப்போது அந்த வழியாக பாம்பு பழனி மற்றும் அவரது நண்பர்கள் சுந்தரமூர்த்தி,(23) முகுந்தன் ஆகியோர் வந்தனர். அவர்கள் தங்களைத்தான் பழனிநாதனின் தாய் திட்டுவதாக கருதி அவரிடம் தகராறு செய்தனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த பழனிநாதன், பாம்பு பழனி தரப்பினரிடம் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கத்திக்குத்து

இதனால் ஆத்திரம் அடைந்த பாம்பு பழனி, மற்றும் அவரது கூட்டாளிகள் பழனிநாதனை சரமாரியாக கத்தியால் குத்தி கொல்ல முயன்றனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதனை கண்டதும் பாம்பு பழனியும் அவரது கூட்டாளிகளும் தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த பழனிநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மேற்குபகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், மற்றும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.சுந்தரமூர்த்தி, முகுந்தன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பாம்பு பழனியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.முகுந்தன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

மேலும் செய்திகள்