கோட்டயம் அருகே சிறுத்தை தூக்கி சென்ற கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு

கோட்டயம் அருகே கன்றுக்குட்டியை தூக்கி சென்று மரக்கிளையில் சிறுத்தை தொங்க விட்டது. இதையடுத்து பொதுமக்கள் கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.

Update: 2017-06-11 22:15 GMT
கோட்டயம்,

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்துள்ள அதிரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் குடியிருப்பு பகுதிக்குள் வந்த சிறுத்தை ஒன்று, அவரது தொழுவத்தில் நின்ற கன்றுக்குட்டியை அடித்துக் தூக்கி சென்றது. இதனால் கன்றுக்குட்டி கத்தியது. சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

இதற்கிடையே சிறுத்தை கன்றுக்குட்டியை அருகில் உள்ள ரப்பர் தோட்டத்துக்குள் தூக்கி சென்றது. பின்னர் மரக்கிளை இடையில் வைத்து கொன்று சாப்பிட முயன்றது. ஆனால் பொதுமக்கள் சத்தம் போட்டதால் கன்றுக்குட்டியை போட்டு விட்டு சிறுத்தை தப்பியோடியது. இதனால் மரக்கிளையில் தொங்கிய படி கன்றுக்குட்டி தவித்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கன்றுக்குட்டியை மரத்தில் இருந்து காப்பாற்றினர். சிறத்தை தாக்கியதில் கன்றுக்குட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் கால்நடை டாக்டர்களின் மூலம் கன்றுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கூண்டு

சிறுத்தை ஊருக்குள் புகுந்து கன்றுக்குட்டியை தூக்கி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை யினர் கூறும்போது, ‘குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சிறுத்தை கன்றுக்குட்டியை அடித்து கொல்ல முயன்றுள்ளது. எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனியாக யாரும் நடந்து செல்ல வேண்டாம். சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றனர்.


மேலும் செய்திகள்