370 சிறு கோவில்களுக்கு பூஜை உபகரணங்கள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 370 சிறு கோவில்களுக்கு ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.

Update: 2017-06-11 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அரங்கில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சிறு கோவில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறு கோவில்களுக்கு பூஜை உபகரணங்களை வழங்கினர்.

ரூ.2½ கோடி வைப்புநிதி

பின்னர் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள சிறிய கோவில்கள் உள்ளிட்ட கிராமப்புறங்களில் அமைந்துள்ள கோவில்களில் முறையான பூஜை செய்திட ஏதுவாக ஏறத்தாழ 10 ஆயிரம் சிறிய கோவில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கிட ரூ.2½ கோடி நிதியினை ஒதுக்கீடு செய்ததால், அனைத்து கோவில்களிலும் முறையாக பூஜைகள் நடந்து வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2015-16-ம் நிதியாண்டில் கிராம புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள 340 கோவில்களுக்கு பூஜை உபகரணங்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டு உள்ளன.

மேலும் ஒருகால பூஜை செய்யக்கூட நிதிவசதி இல்லாத கோவில்களுக்கு இந்த அரசு சார்பில் ரூ.25 ஆயிரம் வைப்பு நிதியாக வழங்கி, அதிலிருந்து பெறப்படுகின்ற வட்டியின் மூலம் ஒருகால பூஜை செய்ய நிதிஉதவி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் இத்தொகை போதவில்லை என்ற காரணத்தால் ரூ.25 ஆயிரமாக ஆக வழங்கப்பட்ட வைப்பு நிதியினை ரூ.1 லட்சமாக உயர்த்தி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 277 கோவில்களுக்கு ரூ.2½ கோடி வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் வருகின்ற வட்டித்தொகை மூலம் அனைத்து கோவில்களிலும் ஒருகால பூஜை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 370 கோவில்களுக்கு முறையாக பூஜை செய்திட ஏதுவாக பித்தளை தாம்பளம், மணி, கார்த்திகை விளக்கு மற்றும் தொங்கு விளக்கு ஆகியன அடங்கிய ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் சேலம் இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் மங்கையர்க்கரசி, முன்னாள் எம்.பி. அன்பழகன் உள்பட இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், கிராமக்கோவில் பூசாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

பஸ் வழித்தடம் நீட்டிப்பு

முன்னதாக நாமக்கல் பஸ்நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் வழியாக சின்னகரசம்பாளையம் வரை வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்ட பஸ் சேவையையும், நாமக்கல்லில் இருந்து சிந்தம்பட்டி வழியாக செவிந்திப்பட்டி வரை வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்ட பஸ் சேவையையும் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோட்ட மேலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்