டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்

திருவாரூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-06-11 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட மதுரா நகரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையினால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்யக்கோரி பலமுறை டாஸ்மாக் நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து நேற்று மதுரா நகர், கலைஞர் நகர், அண்ணாநகர் மற்றும் சுந்தரவளாகத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் (பொறுப்பு) ராஜகோபால், ராணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மற்றும் டாஸ்மாக் குடோன் மேலாளர் காமராஜ் ஆகியோரிடம் அவர்கள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 14-ந்தேதி (புதன்கிழமை) மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்