கண்மாய், குளங்களில் வண்டல் மண் எடுத்து பசுமை புரட்சி ஏற்படுத்துங்கள் கலெக்டர் வேண்டுகோள்

வண்டல் மண், சவடுமண் போன்றவற்றை பயன்படுத்தி பசுமை புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்று விவசாயிகளுக்கு கலெக்டர் சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-06-11 22:45 GMT
விருதுநகர்,

மாவட்டத்தில் கண்மாய், அணைகள் உள்ளிட்ட 431 நீர்நிலைகளில் விவசாயிகள் வண்டல் மண், சவடு மண் போன்றவற்றை இலவசமாக எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி விவசாயிகள் வண்டல் மண் எடுத்துச்செல்கின்றனர். இந்த பணிகளை கலெக்டர் சிவஞானம் ஆய்வு செய்து வருகிறார்.

சிவகாசி அருகிலுள்ள ஆனைக்குட்டம் அணையில், நீர் வரத்துப்பகுதிகளில் உள்ள மேடுகளை தூர்வாருவதன் மூலம் கிடைக்கும் வண்டல் மண், சவடுமண், கிராவல் போன்ற கனிமங்களை அரசாணையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு இலவசமாக எடுத்து விவசாய நிலங்களை மேம்படுத்த வினியோகம் செய்யும் பணியினை கலெக்டர் சிவஞானம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:- நீர்வரத்துப்பகுதிகளில் உள்்்ள மேடு, பள்ளங்களை தூர்வாரி அகலம் மற்றும் ஆழப்படுத்தி, சமன் செய்து கண்மாயின் கரைகள் உயர்த்தப்படுவதன் மூலம் நீரின் கொள்ளளவு அதிகப் படுத்தப்படுகிறது.

நீர்மட்டம்

மேலும் அணையின் உட்பகுதியில் புதிதாக நீர்வரத்துக்கால்வாய் அமைத்து, ஏற்கனவே இயற்கையாக இருக்கக்கூடிய நீர்வரத்துக்கால்வாய்களுடன் இணைப்பதன் மூலமாக பருவமழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாக வெளியேறாமல் சேமிப்பதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. மேலும், இவ்வாறு நீர்வரத்துப்பகுதிகளை தூர்வாரும் போது கிடைக்கும் வண்டல் மண், சவடுமண், கிராவல் போன்ற கனிமங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் செய்வதால் அவர்களது விவசாய நிலங்களை மேம்படுத்தி விவசாயத்தை பெருக்கி மண்வளம் காத்து பசுமைப்புரட்சியை ஏற்படுத்து முடியும். இந்த வாய்ப்பை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தங்கள் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி, கண்மாய், குளம் அல்லது அருகிலுள்ள கிராமத்தில் உள்ள ஏரி, கண்மாய், குளம் குறித்த கிராம கணக்குகளுடனும், மற்றும்் உரிய ஆவணங்களுடனும் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று வருவாய் கோட்்டாட்சியரிடமோ, வருவாய் வட்டாட்சியரிடமோ, வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ, பொதுப்பணித்துறை அலுவலரிடமோ, கனிம வளத்துறை அலுவலரிடமோ, வேளாண்மை விரிவிக்க மைய அலுவலரிடமோ அல்லது கலெக்டருக்கோ விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், சிவகாசி கோட்டாட்சியர்(பொறுப்பு) சங்கரநாராயணன், சிவகாசி தாசில்தார் ஸ்ரீதர் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்