விளாகத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 52 பேர் காயம்

விளாகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 52 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2017-06-11 22:45 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விளாகத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி விளாகம் கிராமத்தின் நடுவே வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. இதில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், ஜெயங்கொண்டம், திருச்சி, திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 450-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

52 பேர் காயம்

போட்டியில் காளைகள் முட்டியதில் கல்லக்குடியை சேர்ந்த பிரேம்குமார் (வயது 23), ஊவனூரை சேர்ந்த இளம்பருதி (30), கோவண்டாகுறிச்சியை சேர்ந்த மார்ட்டின் (32), கோவில் எசனையை சேர்ந்த சிலம்பரசன் (28), பொன்னுசாமி (61) உள்பட 52 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பொன்னுசாமி, சிலம்பரசன் உள்பட 5 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசு

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயங்கள், சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் விளாகம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்