அமெரிக்கா உள்பட வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடையும் மத்திய மந்திரி அனந்தகுமார் பேச்சு

அமெரிக்கா உள்பட வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடையும் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் கூறினார்.

Update: 2017-06-11 20:15 GMT

பெங்களூரு,

அமெரிக்கா உள்பட வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடையும் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் கூறினார்.

இந்தியா வளர்ச்சி அடையும்

பெங்களூரு ஆடுகோடியில் உள்ள முனிசின்னப்பா விளையாட்டு மைதானத்தில் மோடி விழா கண்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி அனந்தகுமார் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:–

பிரதமர் மோடி தலைமையில் அமெரிக்கா, ஜெர்மனி, சீனா, பிரான்சு ஆகிய வளர்ந்த நாடுகளுக்கு சரிசமமாக இந்தியா வளர்ச்சி அடையும். உலகின் 5 அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் முதல் நாடாக உள்ள அமெரிக்காவுக்கு நேரடி போட்டியாக இந்தியா உள்ளது. அதிலும் நமது மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு ஆகும்.

உத்தரவாதம் இல்லாமல் கடன்

உயிரி தொழில்நுட்பத்தில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்க தயாராக உள்ளது. 28 கோடி பேருக்கு ஜன்தன் திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தின் கீழ் 7.5 கோடி இளைஞர்களுக்கு ரூ.3.5 லட்சம் கோடி எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஜீவன்ஜோதி, ஜீவன்சுரக்ஷா, அடல் பென்சன் திட்டங்கள் மூலம் 11.5 கோடி பேர் பயன் பெற்று வருகிறார்கள். 15.16 கோடி ஏழை குடும்பங்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்திற்கு இதுவரை பயிர் இழப்பீட்டுக்கு ரூ.4,600 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதுவரை பயிர் இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்கவில்லை.

வெள்ளை அறிக்கை

மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் கர்நாடகத்திற்கு ரூ.4,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது கர்நாடகத்திற்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது என்பது குறித்து கர்நாடக அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். 50 சதவீதம் அளவுக்கு பயிர் சேதம் ஏற்பட்டு இருந்தால் மட்டுமே நிவாரணம் வழங்கும் விதிமுறை அமலில் இருந்தது. இந்த விதிமுறையில் திருத்தம் செய்து, 33 சதவீதம் சேதம் அளவுக்கு பயிர் சேதம் ஏற்பட்டு இருந்தாலே நிவாரணம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்க சட்ட திருத்தம் செய்யப்பட்டு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு டெல்லி மேல்–சபையின் ஒப்புதல் பெற வேண்டும்.

இவ்வாறு அனந்தகுமார் பேசினார்.

மேலும் செய்திகள்