செலவுக்கு பணம் தராமல் குடித்து விட்டு வந்து அடித்ததால் கணவரை அரிவாளால் வெட்டிய பெண் கைது

குடும்ப செலவுக்கு பணம் தராமல் குடித்துவிட்டு வந்து அடித்த கணவரை அரிவாளால் வெட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-11 23:00 GMT

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ராமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோணிகாரகுப்பம் அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி மணியம்மாள்(45). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

சுப்பிரமணிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடும்ப செலவுக்கு கூட பணம் தராமல் முழுவதையும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கணவருக்கு அரிவாள் வெட்டு

நேற்று காலை சுப்பிரமணி வழக்கம்போல் வீட்டு செலவுக்கு பணம் தராமல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை மணியம்மாள் தட்டிக்கேட்டார். இதனால் மனைவியை சுப்பிரமணி அடித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மணியம்மாள், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவர் சுப்பிரமணியை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு முகம், கை, உதடு ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.

கைது

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பொதட்டூர்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், படுகாயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சுப்பிரமணியின் மனைவி மணியம்மாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்