தமிழக அரசை மோடி இயக்குவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை ராஜஸ்தான் மாநில மந்திரி பேட்டி

தமிழக அரசை பிரதமர் மோடி இயக்குவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று ராஜஸ்தான் மாநில மந்திரி காளிசரண் ஷெரப் கூறினார்.

Update: 2017-06-11 20:45 GMT

சங்கரன்கோவில்,

தமிழக அரசை பிரதமர் மோடி இயக்குவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று ராஜஸ்தான் மாநில மந்திரி காளிசரண் ஷெரப் கூறினார்.

கருத்தரங்கு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் மத்திய அரசின் மூன்று ஆண்டு சாதனை விளக்க கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ராஜஸ்தான் மாநில சுகாதார துறை மந்திரி காளிசரண் ஷெரப் சங்கரன்கோவில் வந்தார். அவருக்கு நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் நேற்று காலை தேரடி திடலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் தற்போது இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே ராஜஸ்தான் மாநிலம் 90 சதவீத அளவிற்கு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தூய்மை பாரதம் திட்டத்தில் ராஜஸ்தான் இந்திய அளவில் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.

மத்திய அரசு இயக்கவில்லை

மாட்டு இறைச்சி தடை என்பது மத்திய அரசால் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் அதனை பற்றி கருத்து கூற முடியாது. மேலும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மலேசியாவில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் முடிவு எடுப்பார்.

தமிழ்நாட்டில் தற்போதைய அரசை பா.ஜ.க. இயக்கவில்லை. தமிழ்நாட்டில் ஜெயலலிதா, கருணாநிதி மிகப்பெரிய தலைவர்கள். ஜெயலலிதா மறைந்து விட்டதாலும், கருணாநிதி உடல்நிலை காரணமாக அரசியலில் செயல்படாமல் இருப்பதாலும், மோடி தான் தமிழக அரசை இயக்குவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. தமிழகத்தில் அ.தி.மு.க.வில் 3 அணிகளும், தி.மு.க.வில் குடும்ப சண்டையும் நடந்து வருகிறது.

ஜனாதிபதி தேர்தல்

மோடி உலக அளவில் பேசப்படும் தலைவராக இருந்து வருகிறார். அவருக்கு இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் சொந்த மாநிலங்கள் தான். எந்த மக்களையும் அவர் பிரித்து பார்க்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு, செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட நிர்வாகிகள் குமரேச சீனிவாசன், அன்புராஜ், வெங்கடேஸ்வர பெருமாள், பாலகுருநாதன், சுப்பிரமணியன், ராமராஜ், நகர தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்