குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி,
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றாலம் சீசன்நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 1–ந்தேதி சீசன் தொடங்கியது. தொடக்கத்தில் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மட்டும் தண்ணீர் விழுந்தது. அதன்பிறகு இடையே 2 நாட்கள் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து அருவிகளில் தண்ணீர் வரத்து கூடுவதும், குறைவதுமாக இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
விடுமுறை நாளில் கூட்டம்இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குற்றாலத்தில் அதிக அளவில் இருந்தது. காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் வரத் தொடங்கினர். இதனால் அருவிக்கரைகள் மட்டும் அல்லாமல் பஜார் பகுதியிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
குற்றாலம் மற்றும் தென்காசியில் காலையில் இருந்தே வெயில் இல்லை. சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியான சூழல் நிலவியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த 2 நாட்களை விட நேற்று தண்ணீர் சற்று கூடுதலாக விழுந்தது.
ஆனந்த குளியல்மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் விழ தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.