மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்: சென்னை வணிக வளாக ஊழியர் சாவு

சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. சென்னை வணிக வளாக ஊழியர் சாவு.

Update: 2017-06-10 22:36 GMT
மதுராந்தகம் 

திருவண்ணாமலை மாவட்டம் பெருமளத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 32). இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் காசாளராக வேலை பார்த்து வந்தார்.

இவர் தனது அக்காவின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு சென்னையிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் சென்னை– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அய்யனார் கோவில் அருகே சென்ற போது, சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் அவரது மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அவர் மீது பஸ் ஏறியதில் பாக்கியராஜ் உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார்.

 விபத்து குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணிஸ்டாலின் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தினால் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்