சினிமா தியேட்டரில் ‘பப்ஸ்’ சாப்பிட்ட 2 பேருக்கு வயிற்றுப்போக்கு, மயக்கம்
திருவள்ளூர் அருகே சினிமா தியேட்டரில் பப்ஸ் சாப்பிட்ட 2 பேருக்கு வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் ஏரிக்கரையை சேர்ந்தவர் சூர்யா (வயது 21). இவர் நேற்றுமுன்தினம் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான அஜித்(21), சிரஞ்சீவி(20) ஆகியோருடன் திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்ப்பதற்காக சென்றார்.
படத்தின் இடைவேளையின்போது அங்குள்ள கேன்டீனில் 3 பேரும் முட்டை பப்ஸ் வாங்கி சாப்பிட்டனர். அதில் உள்ள முட்டை பிளாஸ்டிக் போன்று இருந்ததால் சாப்பிட முடியவில்லை.
இதைத்தொடர்ந்து அவர்கள் பப்சை கேன்டீன் ஊழியர்களிடம் காண்பித்தனர். இது முட்டை பப்ஸ்தான் சாப்பிடலாம் என கூறியதை தொடர்ந்து சூர்யா, அஜித் இருவரும் அந்த முட்டை பப்சை முழுவதுமாக சாப்பிட்டனர். ஆனால் சிரஞ்சீவி மட்டும் அந்த பப்சை சாப்பிடாமல் து£க்கி எறிந்து விட்டார். பின்னர் 3 பேரும் படம் பார்க்க தியேட்டருக்கு சென்று விட்டனர்.
வயிற்றுப்போக்கு, மயக்கம்
சிறிது நேரத்தில் சூர்யா, அஜித் ஆகியோருக்கு திடீரென வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதை தனது நண்பரிடம் தெரிவித்தனர்.
உடனடியாக அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இந்த தகவல் அறிந்ததும் சூர்யா மற்றும் அஜித்தின் உறவினர்கள், நண்பர்கள் அந்த தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சினிமா தியேட்டரில் விற்பனை செய்த முட்டை பப்சில் பிளாஸ்டிக் கலந்துள்ளதா என அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.