தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு
தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்பு அலைகள் சீறி எழுந்தன
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்றுடன் கடல்கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் அலைகள் சீறி எழுந்தன.
சுற்றுலா பயணிகளுக்கு தடைராமேசுவரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காற்றின் வேகம் குறைந்து இருந்தது. இந்நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீச தொடங்கியது. தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. சூறாவளி காற்றால் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து அரிச்சல்முனை கடற்கரை வரை அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையில் பல இடங்களில் சாலை மணல் மூடிய நிலையில் காணப்பட்டது. குறிப்பாக கடைகோடி பகுதியான அரிச்சல்முனை பகுதியில் சாலையின் பாது£ப்பு கருதி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களையும் தாண்டி மணல் சாலை, நடைபாதை வரை பரவி இருந்தது.
மேலும் பலத்த சூறாவளி காற்றால் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தின் சுவர்கள், மின் கம்பத்தின் உயரத்துக்கு மேல் கடல் அலைகள் சீறி எழுந்தன. இதனால் பாதுகாப்பு கருதி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன் பிடி இறங்கு தளத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடல் கொந்தளிப்புஅரிச்சல்முனை அருகே தடுப்புச் சுவரை தாண்டி சாலை வரையிலும் கடல் நீர் வந்து சென்றது. இதே போல் பாம்பன், மண்டபம் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசியதுடன் தென் கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பாம்பன் ரெயில் பாலத்தில் நேற்று அனைத்து ரெயில்களும் மித வேகத்தில் ஊர்ந்து சென்றன.