வால்பாறையில் தோட்ட தொழிலாளியின் வீடு எரிந்து சேதம்

வால்பாறையில் தோட்ட தொழிலாளியின் வீடு எரிந்து நாசமானது.

Update: 2017-06-10 21:30 GMT

வால்பாறை,

வால்பாறையை அடுத்த ஹைபாரஸ்ட் கீழ்பிரிவு பகுதி எஸ்டேட்டை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. தேயிலை தோட்ட தொழிலாளி. இவருடைய கணவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

சுப்புலட்சுமி, நேற்று இரவு 7 மணியளவில் அருகில் குடியிருப்பில் வசிப்பவர்களுடன் சேர்ந்து அங்குள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். இதனர் குடியிருப்பு பகுதியில் யாரும் இல்லாத நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் சுப்புலட்சுமியன் வீட்டு மேல் கூரையில் தீப்பிடித்து புகை வந்து கொண்டு இருந்தது.

அதை பார்த்து பெண்கள் சிலர் கூச்சலிட்டபடி தீயை அணைக்க முயன்றனர். மேலும் கோவிலுக்கு சென்ற சுப்புலட்சுமி மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

4 மணி நேர போராட்டம்

இது குறித்து வால்பாறை தீயணைப்பு நிலையத்திற்கும், முடீஸ் போலீசாருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். பின்னர் எஸ்டேட் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தண்ணீரை ஊற்றியும், தேயிலை செடிகளுக்கு மருந்தடிக்கும் எந்திரங்களில் தண்ணீரை பீய்ச்சியடித்தும் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எஸ்டேட் பகுதி சாலைகளில் தீயணைப்பு வாகனம் வர முடியாததால், தொழிலாளர்கள் தீயை அணைத்து முடித்த பிறகே தீயைணப்பு வீரர்கள் வந்து தீ பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

எரிந்து நாசம்

இந்த தீ விபத்தில் சுப்புலட்சுமியின் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, ரூ.26 ஆயிரம் ரொக்க பணம், 6 பவுன் நகை, பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வீட்டு உபயோக பொருட்கள், வீட்டு பட்டா, நகை அடகு ரசீது உள்ளிட்ட அனைத்தும் எரிந்து நாசமானது.

சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.1½ லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை, இது குறித்து முடீஸ் போலீசாரும், வால்பாறை வருவாய்த் துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்