கர்நாடகத்தில் குக்கிராமங்களுக்கும் நகர பஸ் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை மந்திரி ராமலிங்கரெட்டி பேச்சு

கர்நாடகத்தில் குக்கிராமங்களுக்கும் நகர பஸ் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

Update: 2017-06-10 21:00 GMT

கோலார் தங்கவயல்,

கர்நாடகத்தில் குக்கிராமங்களுக்கும் நகர பஸ் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

பஸ் நிலையம் திறப்பு

கோலார் மாவட்டம் சீனிவாசப்பூரில் ரூ.7 கோடி செலவில் நவீன முறையில் அரசு பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.

இதில், மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில சுகாதாரத்துறை மந்திரியுமான ரமேஷ்குமார், மாநில போக்குவரத்து துறை மந்திரி ராமலிங்கரெட்டி, கே.எச்.முனியப்பா எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பஸ் நிலையத்தை திறந்து வைத்தனர். இந்த விழாவில் மந்திரி ராமலிங்கரெட்டி பேசியதாவது:–

குக்கிராமங்களுக்கும் விரிவுபடுத்த...

கர்நாடகத்தில் 40 நகரங்களில், நகர பஸ் சேவை சிறப்பாக நடந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள நகரங்களில் இயக்கப்படும் நகர பஸ் சேவையை குக்கிராமங்கள் வரை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் குக்கிராமங்களில் வசிக்கும் மக்களும் பயனடைவார்கள். கோலார் டவுனில் 32 நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் கூடுதலாக 20 நகர பஸ்கள் இயக்கப்படும்.

கோலார் அரசு பஸ் நிலையத்தை ரூ.3 கோடி செலவில் நவீன முறையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோலார் தங்கவயலில் ரூ.6 கோடி செலவில் நகர பஸ்களுக்கான பணிமனை கட்டப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான பணிகள் முடிவடையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்