சென்டிரல் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆட்டோவில் இருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
சென்டிரல் ரெயில் நிலையம் முன்புள்ள சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆட்டோவில் இருந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு.
சென்னை,
சென்னை பெரம்பூரில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் வசித்து வருபவர் நீரு மணிமாயி (வயது 62). இவர் நேற்று முன்தினம் பிராட்வே சென்றுவிட்டு, அங்கிருந்து வீட்டிற்கு ஆட்டோவில் திரும்பினார். ஆட்டோ சென்டிரல் ரெயில் நிலையம் முன்புள்ள சாலையில் வந்தபோது, அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆட்டோ, மற்ற வாகனங்களைப் போல் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
அந்த நேரத்தில், ஆட்டோ ஓரமாக நடந்து வந்த மர்ம ஆசாமி ஒருவர், திடீரென ஆட்டோவில் இருந்த நீரு மணிமாயியின் கழுத்தில் கிடந்த 3பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, ஓட்டம் பிடித்தார். சாலையில் சென்றவர்கள் மர்ம ஆசாமியை பிடிக்க முயன்றும் அவர்களால் முடியவில்லை.
இதுகுறித்து, நீரு மணிமாயி பூக்கடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.