பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு 3–வது சம்பள சீராய்வு குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்
பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு 3–வது சம்பள சீராய்வு குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் சங்கத்தின் பொது செயலாளர் பிரகலாத் ராய் கூறினார்.
திருச்சி,
திருச்சி பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் நேற்று அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் ‘இந்திய தொலைத்தொடர்பு துறையில் பி.எஸ்.என்.எல் –ன் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கத்தில் அகில இந்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சிவகுமார், பொதுச்செயலாளர் பிரகலாத் ராய், தென் மண்டல செயலாளர் உதயசூரியன், தமிழ் மாநில செயலாளர் துரையரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முன்னதாக அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரகலாத்ராய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
ரூ.32 ஆயிரம் கோடி வருவாய்தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிப்பதற்காக பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு அளித்த சலுகைகள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் இன்முகத்துடனான சேவை ஆகியவற்றின் பலனாக தற்போது நஷ்டத்தில் இருந்து மீண்டு வருகிறது. கடந்த 2016–17ம் நிதியாண்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 32 ஆயிரம் கோடியை எட்டி உள்ளது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை திட்டத்தில் பி.எஸ்.என்.எல். லுக்கு மத்திய அரசு அறிவித்த ரூ. 18 ஆயிரத்து 500 கோடியில் பி.எஸ்.என்.எல்.லுக்கு ரூ.6 ஆயிரத்து 740 கோடி தான் ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2013–14ம் நிதியாண்டில் ரூ. 8 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
சம்பள சீராய்வு குழுஇந்தியா முழுவதும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 3½ லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். 2 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர். மூன்றாவது சம்பள சீராய்வு குழு பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்றினால் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். எனவே இந்த பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சரவைக்கு வேண்டு கோள் வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.