கடையம், திசையன்விளையில் குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி

கடையம், திசையன்விளையில் குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு, அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

Update: 2017-06-10 20:45 GMT

கடையம்,

கடையம், திசையன்விளையில் குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு விவசாயிகளுக்கு, அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

வடபத்துகுளம்

குளங்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நேற்று கடையம் ராமநதி அணைக்கு செல்லும் வழியில் உள்ள வடபத்துகுளத்தில் விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அம்பை தாசில்தார் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், வருவாய் ஆய்வாளர் சுப்புலட்சுமி, முன்னாள் யூனியன் தலைவர் பொன்னுத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள் சுந்தர், குத்தாலிங்கம், அரிகரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் பேட்டர்சன், சரவணகுமார், பணி ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோரும் உடன் இருந்தனர். 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ள தாசில்தாரிடம் அனுமதி பெற்றனர்.

உறுமன்குளம்

இதேபோன்று திசையன்விளை அருகே உள்ள உறுமன்குளத்திலும் வண்டல் மண் அள்ளிக் கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக, உறுமன்குளம் கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமுக்கு, ராதாபுரம் தாசில்தார் ரவிகுமார் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் கொம்பையா முன்னிலை வகித்தார். உறுமன்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பொன் இசக்கி வரவேற்றார். 59 விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்கும் அனுமதியை, தாசில்தார் வழங்கினார்.

இலவச வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். நஞ்சை நிலத்துக்கு ஏக்கருக்கு 25 யூனிட்டும், புஞ்சை நிலத்துக்கு ஏக்கருக்கு 30 யூனிட்டும், சொந்த பயன்பாட்டுக்கு தேவைப்படும் பொதுமக்களுக்கு 10 யூனிட்டும் வண்டல் மண் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்