மாட்டு இறைச்சிக்கு தடை: நெல்லையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் நடந்தது
மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து, நெல்லையில் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை,
மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து, நெல்லையில் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் தடை உத்தரவிற்கு எதிராக அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட மத்திய அரசின் தடையை கண்டித்து நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைபிரிவு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அந்தோணிசெல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் அமீர்கான் முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கோஷங்கள் எழுப்பினர்ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராம்நாத், உமாபதிசிவன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட துணைதலைவர் வாகை கணேசன், அப்துல்காதர், ஆசாத், முன்னாள் மண்டல தலைவர் பாலசுப்பிரமணியன், ராஜீவ்காந்தி, மண்டல தலைவர்கள் கார்த்திக், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.