திருவண்ணாமலையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது

திருவண்ணாமலையில் அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

Update: 2017-06-10 00:28 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு திடலில் சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் அடுத்த மாதம் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாமில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பழனி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளிப்பிரியா, உதவி கலெக்டர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாமில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாமில் திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 17½ வயது முதல் 23 வயது நிரம்பிய இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

முகாமில் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன், சோல்ஜர் டிரேட்ஸ்மேன், சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரில் ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் (ஜூலை) 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். முகாமில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காதவர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.

இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்

முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு முதற்கட்டமாக உடற்தகுதி தேர்வும், மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். இதில் தகுதி பெற்றவர்களுக்கு சென்னையில் எழுத்துத்தேர்வு நடத்தப்படும்.
ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். உடல்தகுதி, மருத்துவ பரிசோதனை மற்றும் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ராணுவத்துக்கு தேர்வாக முடியும். விண்ணப்பதாரர்கள் முகாமில் கலந்துகொள்ளும் நாளன்று 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், குடியுரிமை, சாதி மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் விஜயகுமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்