டம்மி ரூபாய் நோட்டுடன் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பெண்ணால் பரபரப்பு

மதுரை வண்டியூரைச் சேர்ந்தவர் முகமது ரபீக். இவருடைய மனைவி வகிதா ராணி (வயது 39).

Update: 2017-06-09 23:25 GMT

மதுரை,

மதுரை வண்டியூரைச் சேர்ந்தவர் முகமது ரபீக். இவருடைய மனைவி வகிதா ராணி (வயது 39). இவர் தனது மகனிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து வருமாறு கூறியுள்ளார். அதன்படி அவரும் வண்டியூரில் உள்ள ஒரு தேசிய வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.8 ஆயிரம் எடுத்துள்ளார்.

அதில் வந்த ரூபாய் நோட்டுகளில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு குழந்தைகள் விளையாடும் டம்மி ரூபாய் நோட்டாக இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த வகிதா ராணி அருகில் உள்ள வங்கி அலுவலத்திற்கு சென்று புகார் தெரிவித்தார். வங்கி அதிகாரிகள் அந்த புகாரை ஏற்க மறுத்து போலீஸ் நிலையம் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.

ஆனால் போலீசாரும் அவரது புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வகிதாராணி, நேற்று அந்த ரூபாய் நோட்டுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவிடம் இதுகுறித்து புகார் அளித்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்