நாமக்கல்லில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொது வினியோக திட்டத்திற்கென தனித் துறையை உருவாக்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-06-09 22:45 GMT
நாமக்கல்,

ரேஷன் கடை பணியாளர்களிடம் ஊதியத்தில் இருந்து பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி தொகையையும், நிர்வாகத்தினர் பங்கையும் உரிய கணக்கில் செலுத்தி பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக உள்ள பொதுவினியோக திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை ரேஷன் கடை பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மனோகரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணைத்தலைவர் தண்டபாணி, ஈரோடு மாவட்ட செயலாளர் சதாசிவம், கரூர் மாவட்ட தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் நெடுஞ்செழியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

கோஷம்

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழக பணியாளர் ஒன்றிணைப்பு மாநில தலைவர் சுரேஷ்பாபு, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்