நீலகிரி மாவட்டத்தில் நீட்ஸ் திட்டத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி
நீலகிரி மாவட்டத்தில் நீட்ஸ் திட்டத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி கலெக்டர் சங்கர் தகவல்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நீட்ஸ் திட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சங்கர் தெரிவித்து உள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
நீட்ஸ் திட்டம்தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு, புதிய தொழில்கள் தொடங்குவதற்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த நிறுவனங்களில் நிதியுதவி பெற்றுத்தரப்படும். இந்த திட்டத்தினை மாவட்ட தொழில் மையமும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை திட்ட மதிப்பீட்டு தொகை உள்ள உற்பத்தி மற்றும் சேவை தொழில்களை தொடங்கலாம். அதற்கென்று அரசு 25 சதவீத மானியமும், 3 சதவீத பின்முறை வட்டி மானியமும் வழங்குகிறது.
இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். இதில் பொதுப்பிரிவினருக்கு 35 வயதும், சிறப்பு பிரிவினருக்கு (மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள்) 45 வயது எனவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நீட்ஸ் திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும் பங்களிப்பு செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் வருமான வரம்பு எதுவும் கிடையாது. உரிமையாளர் நிறுவனங்களும், பங்குதாரர் நிறுவனங்களும் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவர்.
மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடுஇந்த திட்டத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம், மகளிருக்கு (ஆதரவற்ற, கைவிடப்பட்டோர்) 50 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேற்கண்ட ஒதுக்கீடுகளில் தேவையான நபர்கள் இல்லாத பட்சத்தில், இதர பிரிவினரில் இருந்து தகுதிகளுடன் கூடிய நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். ஏற்கனவே அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகிய நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்று திருப்பி செலுத்தாதவராக இருத்தல் கூடாது.
நீட்ஸ் திட்டத்தின் அரசாணை, விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த திட்ட பயனாளிகள் மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு மாத மேலாண்மை பயிற்சி ரூ.3 ஆயிரம் உதவித்தொகையுடன் அளிக்கப்படும்.
மானியத்தொகைஇந்த திட்டத்தின் கீழ் தேயிலை தொழிற்சாலை, உல்லன் ஆடை, அடுமனை பொருட்கள், சாக்லேட், வாசனைத்திரவியங்கள், சணல் பைகள், பாக்குமட்டை தட்டு, கணினி மென்பொருள் உள்ளிட்ட உற்பத்தி தொழில்கள் மற்றும் அழகுநிலையம், உடற்பயிற்சி நிலையம், உணவகங்கள், மருத்துவம் உள்ளிட்ட புதிதாக தொழில்கள் தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் 2017–2018–ம் நிதியாண்டில் ரூ.1 கோடியே 90 லட்சம் மானியத்தொகை வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆகவே, தகுதி மற்றும் ஆர்வம் உள்ள முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.