டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் சாலைமறியல்

அவினாசி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-09 22:45 GMT

அவினாசி

திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட வள்ளிபுரம் கிராமத்தில் கரியாங்காடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அந்த இடத்தின் உரிமையாளர் அங்கு புதிய கட்டிடம் கட்டி வருவதாக தெரிகிறது.

இதுபற்றி அந்த பகுதி பொதுமக்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள், தங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ–மாணவிகள், பெண்கள் உள்பட 500–க்கும் மேற்பட்டோர் பெருமாநல்லூர்–குன்னத்தூர் சாலையில் தட்டாங்குட்டை அருகே நேற்று காலை திரண்டனர்.

சாலை மறியல்

பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் உட்கார்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவ–மாணவிகள், ‘தமிழக அரசே நாங்கள் படிக்கவா? குடிக்கவா?‘ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

அதுபோல் பெண்கள் தங்கள் கைகளில், ‘குடிகெடுக்கும் அரக்கனை (மதுக்கடை) எங்கள் கிராமத்துக்குள் விடமாட்டோம்‘, ‘மாவட்ட நிர்வாகமே, அனுமதிக்காதே, அனுமதிக்காதே டாஸ்மாக் மதுக்கடையை அனுமதிக்காதே‘, ‘விடமாட்டோம், விடமாட்டோம், எங்கள் கிராமத்தில் மதுக்கடை திறக்க விடமாட்டோம்‘, ‘டாஸ்மாக் நிர்வாகமே, கெடுக்காதே, கெடுக்காதே, கிராம அமைதியை கெடுக்காதே‘ போன்ற வாசகம் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி சாலைகளில் உட்கார்ந்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

பேச்சுவார்த்தை

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–

எங்கள் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 200–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் இந்த பகுதியில் அம்மன் கோவில்கள் உள்ளன. இவற்றின் அருகில் தான் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

போராட்டம்

வள்ளிபுரம் ரே‌ஷன் கடைக்கும், பஸ்நிறுத்தத்துக்கும் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் வழியாகத்தான் பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் அன்றாடம் சென்றுவர வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்தால், அனைத்து தரப்பு பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இதுவரை அமைதியாக இருந்து வரும் எங்கள் கிராமத்தில், டாஸ்மாக் கடை அமைந்தால் அமைதி கெட்டு, சட்டம்–ஒழுங்கு பதிக்கப்படும். எனவே எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம். இதையும் மீறி டாஸ்மாக் கடையை திறக்க முற்பட்டால் போராட்டத்தை தீவிர படுத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

அதற்கு, உங்கள் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்