தாம்பரம் அருகே டி.ஜி.பி. கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 பேர் படுகாயம்

டி.ஜி.பி. கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 பேர் படுகாயம்

Update: 2017-06-09 22:20 GMT
தாம்பரம்,

சென்னை தாம்பரத்தை அடுத்த ஆலப்பாக்கம்–பெருங்களத்தூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேர், ஒரே மோட்டார் சைக்கிளில் பெருங்களத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற ஒரு காரை முந்திச்செல்ல முயன்றனர்.

ஆனால் எதிரே வந்த டிராக்டர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பிய போது, முன்னால் சென்று  கொண்டிருந்த  தமிழ்நாடு சட்டம்–ஒழுங்கு டி.ஜி.பி. ராஜேந்திரன் காரில் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த செந்தில்(வயது 32), சண்முகவேல்(30), வெங்கடேசன்(24) ஆகிய 3 பேரையும் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் டி.ஜி.பி.யின் கார் கதவுகள் சேதம் அடைந்தன. பின்னர் அவர், அதே காரில் புறப்பட்டு சென்று விட்டார். சம்பவம் குறித்து டிராக்டர் டிரைவர் ஜெயசீலனிடம் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்