மாட்டு இறைச்சிக்கான தடையை ரத்து செய்யக்கோரி அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்பு

தக்கலையில் மாட்டு இறைச்சிக்கான தடையை ரத்து செய்யக்கோரி அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

Update: 2017-06-09 22:03 GMT
தக்கலை,

மாட்டு இறைச்சிக்கான தடையை ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் அனைத்துக் கட்சி சார்பில் தக்கலை அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தலைமை தாங்கினார்.

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட காங்கிரஸ் தலைவர் கண்ணாட்டுவிளை பாலையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முருகேசன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஜெகநாதன், லெனினிஸ்ட் அந்தோணி முத்து மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்பு

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவில் சமுக நல்லிணக்கம் இருந்தால் தான் பொருளாதாரம் மேம்படும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் கூறியுள்ளார். மாட்டு இறைச்சிக்கான தடை சட்டத்தை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். மோடிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்த போது அதை மறைக்க கொண்டு வந்த சட்டம் தான் மாட்டு இறைச்சிக்கான தடை சட்டம்.

கேரள அரசு போன்று மாட்டு இறைச்சி தடை விவகாரத்திற்கு எதிராக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேல்புறம் கம்யூனிஸ்டு அலுவலகம், நினைவு ஸ்தூபியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் கம்யூனிஸ்டு சார்பில் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.

பேட்டி

முன்னதாக ஜி.ராமகிருஷ்ணன் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது மக்கள் விரோத அறிவிப்பு. மாநில அரசின் உரிமையை பறிப்பது போல் உள்ளது. தனிநபரின் உணவு விஷயத்தில் மத்திய அரசு தலையிடுகிறது.
அ.தி.மு.க.வை தற்போது பா.ஜ.க. மிரட்டி வருகிறது. அ.தி.மு.க. மூலம் பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது. இது ஒரு போதும் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்