நெய்வேலியில் சென்னை கட்டிட மேற்பார்வையாளர் வெட்டிக்கொலை
நெய்வேலியில் சென்னை கட்டிட மேற்பார்வையாளர் வெட்டிக்கொலை நண்பரை பிடித்து போலீசார் விசாரணை
நெய்வேலி
சென்னையைச் சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் நெய்வேலியில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற நண்பரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை கட்டிட மேற்பார்வையாளர்சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் முருகேசன். இவர் கட்டிட வேலைகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவரிடம் அதேபகுதியை சேர்ந்த தர்மன்(வயது 42) என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.
தற்போது முருகேசன், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்து கொடுத்து வருகிறார்.
இந்த வேலையில் தர்மன் மேற்பார்வையில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் நெய்வேலி இந்திரா நகரில் வெள்ளாளர் நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர், தர்மனின் உறவினர்கள்.
நண்பருடன் சென்றார்இந்த பணியின்போது டிராக்டர் டிரைவரான நெய்வேலி வடக்கு மேலூரை சேர்ந்த கட்டையன் என்ற பிரபுவுக்கும் தர்மனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்தவுடன், தர்மனிடம் தன்னை வீட்டில் கொண்டு விடுமாறு கட்டையன் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது மோட்டார் சைக்கிளில் கட்டையனை அழைத்துக்கொண்டு தர்மன் சென்றார்.
நீண்ட நேரமாகியும் அவர், தான் தங்கியிருந்த வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவருடன் வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் தர்மனை தேடிப்பார்த்தனர்.
வெட்டிக்கொலைஇந்த நிலையில், நேற்று காலை தர்மன் சென்னை–கும்பகோணம் சாலையில் வடக்குமேலூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஒரு மனைப்பிரிவுக்கு செல்லும் சாலையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவருடைய மோட்டார் சைக்கிளும் அருகே விழுந்து கிடந்ததுடன், மதுபாட்டில்களும் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, டவுன் ஷிப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தர்மன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
நண்பனை பிடித்து விசாரணைஇதுகுறித்து தர்மனின் உறவினர் மணிகண்டன் என்பவர் போலீசில் புகார் செய்தார். அதில் நேற்று முன்தினம் தர்மனை கட்டையன் அழைத்து சென்றதாகவும், இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதால், கட்டையன் மீது சந்தேகம் இருப்பதாக புகார் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டையனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட தர்மனுக்கு எல்லம்மா என்ற மனைவியும், வெங்கடேசன், பாஸ்கர் என்று 2 மகன்களும் சென்னையில் வசித்து வருகின்றனர்.