கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-09 22:00 GMT
திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி-கல்லணை சாலையில் உள்ளது சுக்காம்பார் கிராமம். கல்லணைக்கு அருகே உள்ள இந்த கிராமத்தின் வழியாக செல்லும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டு, அங்கு மணல் அள்ளும் பணி நேற்று தொடங்கியது. மணல் ஏற்றி செல்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து லாரிகள் வந்திருந்தன.

இதை அறிந்த திருச்சினம்பூண்டி, கோவிலடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மணல் குவாரியின் முகப்பு பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவகுமார் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து பூதலூர் தாசில்தார் கஜேந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆற்றில் மணல் அள்ளுவதற்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படாது என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

போலீஸ் குவிப்பு

இதைத்தொடர்ந்து கிராம மக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கிராம மக்களின் போராட்டத்தை அடுத்து மணல் குவாரியில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்