சாலையோர கடையில் டீ குடித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

புதுக்கோட்டை கீரனூர் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள சாலையோர கடையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டீ குடித்தார்.

Update: 2017-06-09 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் அரசு மருத்துவ கல்லூரியை தொடங்கி வைத்துவிட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வகுப்பு முடிந்து, புதுக்கோட்டை அரசு மகளிர் பள்ளியில் இருந்து மாணவிகள் வெளியே வந்துகொண்டிருந்தனர். மாணவிகள் காரில் சென்றுகொண்டிருந்த எடப்பாடி பழனிசாமியை பார்த்து கை அசைத்தனர். உடனே எடப்பாடி பழனிசாமி தன்னுடைய காரை நிறுத்தினார்.

மாணவிகளின் அருகே சென்று, “நீங்கள் மேல்நிலை பள்ளிக்கூட படிப்பை நன்றாக படிக்கவேண்டும். டாக்டராகி சேவை செய்யவேண்டும். மருத்துவ படிப்புக்காக நீங்கள் எங்கும் செல்லவேண்டியது இல்லை. நீங்கள் இங்கேயே மருத்துவ படிப்பினை எந்தவித சிரமும் இன்றி படிப்பதற்காக ஜெயலலிதா அரசு மருத்துவ கல்லூரியை தொடங்கியிருக்கிறது” என்று அறிவுரை கூறினார்.
இதையடுத்து, கீரனூர் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள ஒரு டீக்கடைக்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். தன்னுடைய அதிகாரிகளுக்கும், தனக்கும் டீ போடுமாறு கடைக்காரரிடம் கூறினார். டீ கடை நாற்காலியில் அமர்ந்து பொறுமையாக டீ குடித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் எளிமை

பின்னர் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஆயிரம் ரூபாய் எடுத்து டீக்கடைக்காரரிடம் கொடுத்தார். ஆனால் டீக்கடைக்காரர் பணம் எதுவும் வேண்டாம் என்று கூறினார். ஆனால் விடாப்பிடியாக எடப்பாடி பழனிசாமி கொடுத்தார்.

அந்த டீக்கடையில் மணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. டீ நன்றாக இருந்தால், அதனை குடித்தவர்கள் மணியை அடித்துவிட்டு செல்வது வழக்கம். அந்த வகையில் டீ அருமையாக இருந்ததால், எடப்பாடி பழனிசாமியும் அந்த மணியை அடித்துவிட்டு, காரில் ஏறி திருச்சி விமான நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்