பிராண வாயு தயாரிக்கும் கடல்கள்!

கடல்கள் பூமியின் 71 சதவீத பரப்பை ஆக்கிரமித்துள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். உயிர்களின் சுவாசத்திற்குத் தேவையான 70 சதவீத பிராண வாயுவையும் கடல்களே உற்பத்தி செய்கின்றன.

Update: 2017-06-09 06:20 GMT
டல்கள் பூமியின் 71 சதவீத பரப்பை ஆக்கிரமித்துள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். உயிர்களின் சுவாசத்திற்குத் தேவையான 70 சதவீத பிராண வாயுவையும் கடல்களே உற்பத்தி செய்கின்றன. அரிய உயிரினங்களின் சரணாலயமாகவும் கடல்கள் திகழ்கிறது. கடல்களின் பெருமையை இந்த வாரம் அசைபோடுவோம்...

* பூமியின் நிலப்பரப்பில் முக்கால் பகுதியை கடல்நீர் சூழ்ந்துள்ளது. கடல்நீர் தொகுப்பை 5 பெருங்கடல்களாக நாம் வகைப்படுத்தி உள்ளோம். அவை: பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல்.

* பசிபிக் பெருங்கடல், உலக கடல்களில் எல்லாம் பெரியது. பூமியின் 30 சதவீத பரப்பை ஆக்கிரமித்துள்ளது இந்த பெருங்கடல்.

* ‘பசிபிசியஸ்’ என்ற லத்தின் வார்த்தையில் இருந்து பசிபிக் என்ற பெயர் உருவாக்கப்பட்டது. இதற்கு ‘அமைதி நிறைந்தது’ என்று பொருள். அமைதிப் பெருங்கடல் என்று பெயர் பெற்றாலும் பசிபிக் கடல் அமைதியாக இருப்பதில்லை. ‘ரிங்க் ஆப் பயர்’ எனப்படும் நெருப்பு வளைய பகுதி பசிபிக் கடலில்தான் அமைந்துள்ளது. குமுறும் எரிமலை கூட்டங்களைக் கொண்ட பகுதியே இப்படி அழைக்கப்படுகிறது. உலகின் முக்கிய நிலநடுக்கங்கள் பலவற்றுக்கு இந்த எரிமலைகளே காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி எரிமலைகள் சீறி அண்டை நாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்துவது உண்டு.

* உலகின் ஆழமான பகுதி பசிபிக் கடலில்தான் உள்ளது. கயாம் அருகே பிலிப்பைன் கடலில் உள்ள மரியானா அகழிதான் உலகின் ஆழமான பகுதியாகும். இது 10 ஆயிரத்து 920 மீட்டர் (35 ஆயிரத்து 827 அடி) ஆழம் கொண்டதாக அளவிடப்பட்டுள்ளது.

* உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அடுக்கும் பசிபிக் கடலில்தான் உள்ளது. ஆஸ்திரேலிய கடற்கரை அருகே உள்ள ‘கிரேட் பேரியர் ரீப்’ பகுதிதான் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அடுக்காகும். இது 2600 கிலோ மீட்டர் தூரம் பரந்து விரிந்தது. அரிய உயிரினங்களின் வசிப்பிடமாக விளங்குகிறது.



* அட்லாண்டிக் பெருங்கடல் உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடலாகும். இது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இணையான பரப்பளவு கொண்டது. ஆனாலும் இது பசிபிக் கடலின் பரப்பளவில் பாதி அளவே கொண்டது. பூமியின் 20 சதவீத பரப்பை ஆக்கிரமித்துள்ளது.

* அட்லாண்டிக் கடலில்தான் உலகின் மிகப்பெரிய மலைத்தொடர் அமைந்துள்ளது. மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் எனப்படும் இது பெரும்பகுதி கடலில் மூழ்கியுள்ளது. ஐஸ்லாந்து தொடங்கி, அண்டார்டிகா வரை இந்த மலைத்தொடர் நீண்டுள்ளது.

* இந்தியாவின் தெற்கு பகுதியில் ஆப்பிரிக்கா தொடங்கி, ஆஸ்திரேலிய ஆசியப் பகுதி வரை அடங்கியுள்ள கடல்பரப்பு இந்தியப் பெருங்கடல் எனப்படுகிறது. ஒரு நாட்டின் பெயரில் அமைந்துள்ள ஒரே பெருங்கடலும் இதுதான்.

* ‘கம்பேக்’ திமிங்கலங்களின் இனப்பெருக்க மண்டலமாக இந்தியப் பெருங்கடல் விளங்குகிறது. அதிகமான உயிரினங்களையும், வேறு கடல்களில் காணப்படாத சிறப்பு உயிரினங்களும் இந்தியப் பெருங்கடலில் காணப்படுவது சிறப்பு.

* வடக்கு இந்தியப் பெருங்கடல், உலகின் முக்கிய வணிகப் போக்குவரத்து கடல்வழித்தடமாக விளங்குகிறது. எண்ணெய் வளம்மிக்க மத்திய கிழக்கு நாடுகளை ஆசியாவுடன் இணைப்பது இந்த கடல்வழித் தடம்தான். தினமும் 17 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் அரபு தேசங்களில் இருந்து இந்த கடல்வழியாக உலக நாடுகளுக்கு கடத்தப்படுகிறது.



* ஆர்டிக் பெருங்கடல் பூமியின் வடதுருவத்தில் அமைந்துள்ளது. ஆர்டிக் பனிப்பரப்பில் துருவ பனிக்கரடிகள் பெருமளவில் வசிக்கின்றன. பனிப்பரப்பின் அடியில் கடல்பகுதி காணப்படுகிறது.

* ஆர்டிக் பெருங்கடலின் சிறப்பு உயிரினங்கள் ஜெல்லி மீன்கள்தான். இவை அதிகபட்சமாக 8 அடி குறுக்களவு கொண்டதாக வளர்கிறது. மீன்களையும் இதர சில உயிரினங்களையும் உண்டு வாழ்கிறது ஜெல்லிமீன்கள்.

* சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஆண்டுதோறும் ஆர்டிக் கடலின் பனிப்பரப்பில் 1.3 சதவீதம் குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் இன்னும் 100 ஆண்டுகளுக்குள் ஆர்டிக் பகுதி பனிப்பரப்பற்ற கடலாகவும், ஆங்காங்கே நிலத்திட்டுகள் கொண்ட பூமியாகவும் காட்சியளிக்கத் தொடங்கிவிடும் என்று அஞ்சப்படுகிறது.

* அண்டார்டிக் பெருங்கடல் தெற்குப் பெருங்கடல் என்றும் அழைக்கப்படுகிறது. இது பெங்குயின்கள் மற்றும் அல்பட்ராஸ் பறவைகளின் பூமியாக விளங்குகிறது.

* கடல் விதவிதமான உயிரினங்களின் பெரும் சரணாலயமாக திகழ்கிறது. நாம் கடல்களைப் பற்றி அறிந்து கொண்டுள்ள விஷயங்கள் சுமார் 10 சதவீதமே என்று கூறப்படுகிறது. கடலில் காணப்படும் உயிரினங்களில் 25 சதவீதத்திற்கும் குறைவான இனங்களே அறியப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.

* நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றில் 70 சதவீத ஆக்சிஜன் வாயுவை கடல்களே உற்பத்தி செய்கின்றன.

* உலகில் 12 சதவீத மக்களின் நேரடி வாழ்வாதாரமாக இருப்பவை கடல்களே. இவர்களில் 90 சதவீதம் பேர் மீன்பிடித்து வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆண்டுதோறும் சுமார் 150 மில்லியன் டன் முதல் 200 மில்லியன் டன் வரை மீன்கள் பிடிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 85 லட்சம் கோடி ரூபாய் வணிகம் நடக்கிறது.

* உலக வர்த்தகத்தின் அடிநாதமே கடல் போக்குவரத்துதான். எண்ணெய், ரசாயனங்கள், உணவுப்பொருட்கள், சரக்குப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் பெருமளவு கடல் வாணிபம் மூலமாகவே உலக நாடுகளுக்கு சென்றடைகிறது. மீன் ஏற்றுமதி வணிகத்தைவிட இதன் மதிப்பு பல மடங்கு அதிகமாகும்.

* ஆண்டுதோறும் சுமார் 70 கோடிப் பேர் கடல் வழி மார்க்கமாக உலக நாடுகளுக்கு செல்கிறார்கள். கடல்பயணம் மற்றும் சுற்றுலா போன்ற துறையில் 20 கோடி வேலைவாய்ப்புகள் உள்ளன.

* கடலின் அடியில் வைரம், தங்கம் மற்றும் உலோகப் பொருட்கள் ஏராளமாக இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. 1950-ம் ஆண்டுக்குப்பிறகு இந்த கடல்வளங்களை பயன்படுத்தும் வேகம் அதிகரித்துள்ளது. கடற்சுரங்கங்கள் மூலம் கணிசமான தொகை வர்த்தகம் நடக்கிறது.

* கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், ரசாயன கழிவுகள் ஆகியவற்றால் கடல் வாழ் உயிரினங்கள் அழிவை சந்திக்கின்றன. சுற்றுச்சூழல் மாற்றமும் கடலின் காட்சிகளை மாற்றி வருகிறது. இதனால் கடல் சீற்றமும், இயற்கை பேரிடர்களும் உருவாகும் என்று அஞ்சப்படுகிறது. இது பற்றி விழிப்புணர்வு ஊட்டுவதற்காக ஜூன் 8-ந் தேதி உலக கடல்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடல் மாசுகளை குறைக்க உலக நாடுகள் சபதமேற்றுள்ளன. நாமும் பூமியின் உயிர்நாதமான கடல்களை பேணுவோம்! 

மேலும் செய்திகள்