என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவா?

என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா? என்பது குறித்து சட்டசபையில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2017-06-08 23:14 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது சபாநாயகர் இல்லாததால் அவரது இருக்கையில் அமர்ந்து அரசு கொறடா அனந்தராமன் சபையை நடத்தினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

எதிர்க்கட்சிகளுக்கு செய்வது அதிகம்

எம்.என்.ஆர்.பாலன்: எங்கள் அமைச்சர்கள் ஆளுங்கட்சி தொகுதிக்கு செய்வதைவிட எதிர்க்கட்சி தொகுதிக்கு அதிகமாக செய்கிறார்கள். குறிப்பாக அமைச்சர் கந்தசாமி அவ்வாறு செய்கிறார். அவர் ராஜதந்திரி. அவர்களை அவர் ஆளுங்கட்சிக்கு கொண்டுவர வேண்டும்.

என்.எஸ்.ஜெ.ஜெயபால் (என்.ஆர்.காங்): தங்கள் தொகுதி பிரச்சினைகளுக்காக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பது வழக்கம். அதற்காக அவர்கள் ஆளுங்கட்சியில் சேர்ந்துவிட்டதாக அர்த்தம் அல்ல. உங்கள் முயற்சி பலிக்காது எங்கள் எம்.எல்.ஏ.க்கள் என்.ஆர்.காங்கிரசில்தான் உள்ளனர்.

காங்கிரசுக்கு ஆதரவா?

அன்பழகன் (அ.தி.மு.க.): என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த திருமுருகன் நேற்றுதான் சட்டசபைக்கு வந்தார். அவர் முதல்-அமைச்சரை சந்தித்து சால்வை அணிவித்துள்ளார். இதற்கிடையே அவர் காங்கிரசில் சேர்ந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. ஒரு பிரச்சினையில் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் வெளிநடப்பு செய்யும்போது 3 பேர் சபைக்குள் இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரசுக்கு ஆதரவா? அப்படிப்பட்டவர் களுக்கு உடனடியாக நோட்டீசு கொடுக்கவேண்டும்.

என்.எஸ்.ஜெ.ஜெயபால்: கடந்த ஆட்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான வல்சராஜ், மல்லாடி கிருஷ்ணராவ், தேனீ.ஜெயக்குமார் போன்றவர்கள் எங்களுடன்தான் இருந்தனர்.

விதைப்பதையே அறுவடை செய்வார்கள்

அமைச்சர் கந்தசாமி: கடந்த ஆட்சியில் காங்கிரசுக்கு இருந்த வலி இப்போது உங்களுக்கு இருக்கும்.

அனந்தராமன் (காங்): யார் எதை விதைக்கிறார்களோ? அதையே அறுவடை செய்வார்கள்.

இவ்வாறு விவாதம் நடந்தது. 

மேலும் செய்திகள்