பி.பி.எல். ரேஷன் கார்டு கேட்டு 14 லட்சம் மனுக்கள் வந்துள்ளன காங். உறுப்பினர் கேள்விக்கு மந்திரி யு.டி.காதர் பதில்
ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் மொகிதீன் பாவா கேட்ட கேள்விக்கு உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி யு.டி.காதர்
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் மொகிதீன் பாவா கேட்ட கேள்விக்கு உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி யு.டி.காதர் பதிலளிக்கையில் கூறியதாவது:–
கர்நாடகத்தில் கடந்த 3 மாதங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான(பி.பி.எல்.) ரேஷன் கார்டு கேட்டு சுமார் 14 லட்சம் மனுக்கள் வந்துள்ளன. ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைந்ததும், அடுத்த 4 மாதங்களில் பி.பி.எல். கார்டு வழங்கும் பணி தொடங்கப்படும். மனு கொடுத்தவர்களுக்கு அவரவர்களின் வீடுகளுக்கே ரேஷன் கார்டுகள் தேடி வரும்.
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, ஆதார் எண் மட்டும் இருந்தால் போதுமானது. வேறு எந்த ஆவணமும் தேவை இல்லை. முன்பு இந்த பி.பி.எல். கார்டு வாங்க 14 வகையான ஆவணங்கள் கொடுக்க வேண்டி இருந்தது. இதை 4 ஆக குறைத்துள்ளோம். ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு மந்திரி யு.டி.காதர் கூறினார்.