தற்கொலை முயற்சியை கைவிட்டு இரவு முழுவதும் வீட்டின் மேற்கூரையில் தவித்த வாலிபர் வசாயில் ருசிகரம்

தற்கொலை முயற்சியை கைவிட்ட வாலிபர் இரவு முழுவதும் வீட்டின் மேற்கூரையில் தவித்த ருசிகர சம்பவம் வசாயில் நடந்துள்ளது.

Update: 2017-06-07 22:30 GMT

வசாய்,

தற்கொலை முயற்சியை கைவிட்ட வாலிபர் இரவு முழுவதும் வீட்டின் மேற்கூரையில் தவித்த ருசிகர சம்பவம் வசாயில் நடந்துள்ளது.

மனைவியுடன் சண்டை

பால்கர் மாவட்டம் வசாயில் உள்ள பாஸ்கரலி கிராமத்தை சேர்ந்தவர் சந்திப் ஜாதவ்(வயது28). இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக இவர் அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு வந்தார். இதனால் வெறுப்படைந்த அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இனால் சந்திப் ஜாதவ் கடும் விரக்தி அடைந்தார்.

அங்குள்ள பாருக்கு சென்று மது அருந்தினார். மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்ற வருத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து, மீண்டும் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டு அறையில் உள்ள உத்திரத்தில் தூக்கு கயிறை மாட்டினார்.

மேற்கூரையில் தவித்தார்

இதை பார்த்ததும் பீதி அடைந்த அவர் அந்த முயற்சியை கைவிட்டார். பின்னர் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என தெருவில் கிடந்த ஒரு பெரிய இரும்பு குழாயை தூக்கி வைத்து பக்கத்து வீட்டின் மேற்கூரையில் ஏறி கீழே பார்த்து இருக்கிறார்.

அதிலும் பயந்து போன அவர் தனது தற்கொலை முயற்சியை கைவிட்டார். இதன்பின்னர் இறங்க முயற்சி செய்த போது அவர் வைத்திருந்த இரும்பு குழாய் கீழே விழுந்து விட்டது. இதனால் மேற்கூரையில் இருந்து இறங்க வழி தெரியாமல் இரவு முழுவதும் தவித்தார்.

போலீசார் மீட்டனர்

காலை விடிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சந்திப் ஜாதவ் வீட்டின் மேற்கூரையில் தவிப்பதை பார்த்து திகைப்படைந்தனர்.

பின்னர் அவர் நடந்த விவரத்தை கூறியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்து ஏணி மூலம் அவரை கீழே இறக்கினார்கள். பின்னர் அவருக்கு ஆலோசனைகள் வழங்கி, அதே பகுதியில் வசித்து வரும் அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்