ஊத்துமலை அருகே கணவன்–மனைவியை வெட்டிக்கொன்ற வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை தென்காசி கோர்ட்டு தீர்ப்பு

ஊத்துமலை அருகே கணவன்–மனைவியை வெட்டிக்கொன்ற வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

Update: 2017-06-07 20:00 GMT

தென்காசி,

ஊத்துமலை அருகே கணவன்–மனைவியை வெட்டிக்கொன்ற வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

கணவன்–மனைவி கொலை

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கண்ணாடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். அதே ஊரைச் சேர்ந்தவர் குண்டன் மணி. இருவரும் பால் வியாபாரிகள். தொழில் போட்டியால் ஏற்பட்ட தகராறில் கடந்த 2010–ம் ஆண்டு சுப்பிரமணியனை, குண்டன்மணி வெட்டிக்கொலை செய்தார்.

இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக கடந்த 19–5–2011 அன்று சுப்பிரமணியன் தரப்பினர்கள் 10 பேர் சேர்ந்து அதே ஊரைச் சேர்ந்த குண்டன் மணியின் உறவினர்களான செல்வராஜ் (43), அவருடைய மனைவி தங்கமணி (38) ஆகியோரை வெட்டிக் கொலை செய்தனர்.

ஆயுள் தண்டனை

இதுதொடர்பாக கண்ணாடிகுளம் கிராமத்தை சேர்ந்த வெள்ளத்துரை (36), உடையார் (28), சுப்பிரமணி (24), குமார் (23), சேகர் (20), மாடசாமி (32), மணிகண்டன் (30), நடராஜன் (20), கொலையுண்ட சுப்பிரமணியனின் மனைவி மாரியம்மாள் (35) மற்றும் பாளையங்கோட்டை தேவ கிருபை தெருவை சேர்ந்த இளங்கோ (32) ஆகிய 10 பேர் மீது ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி ஈசுவரன், குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்