ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எடுபடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எடுபடாது என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2017-06-07 21:15 GMT

கண்ணமங்கலம்,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எடுபடாது என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

ராணுவவீரர் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி

கண்ணமங்கலத்தை அடுத்த தேப்பனந்தல் கிராமத்தை சேர்ந்த ராணுவவீரர் மணிவண்ணன் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இதனையடுத்து ராணுவவீரர் மணிவண்ணனின் உடல் அவரது சொந்த ஊரான தேப்பனந்தல் கிராமத்தில் 24 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தேப்பனந்தல் கிராமத்துக்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று காலை வந்தார். அவர், ராணுவவீரர் மணிவண்ணனின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:–

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவவீரர் மணிவண்ணனின் இழப்பு நாட்டுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும். இவருடன் உயிரிழந்த மேற்கு வங்க ராணுவவீரர் குடும்பத்துக்கு அம்மாநில அரசு ரூ.50 லட்சம் வழங்கி உள்ளது.

நடிகர்கள் ஆட்சி வராது

மணிவண்ணன் தமிழகத்துக்கும், இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும்.

தமிழகத்தில் தற்போது செயலற்ற அரசின் ஆட்சி நடக்கிறது. ஏற்கனவே அ.தி.மு.க. 2 பிரிவாக பிரிந்து காணப்பட்டது. தற்போது 3 பிரிவாக மாறி வருகிறது. தமிழகத்தில் இனி நடிகர்கள் ஆட்சி வராது. முன்பு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மீது மக்கள் கொண்டிருந்த சினிமா மோகத்தால் அவர்கள் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் தற்போதைய நிலைமை அப்படி கிடையாது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எடுபடாது. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஊழலாட்சி தான் நடத்தினார்கள்.

பிரச்சினைக்கு அரசு தீர்வு காணவில்லை

தற்போது தமிழகத்தில் மீத்தேன் போராட்டம், விவசாயிகள் போராட்டம், நீட்தேர்வு, காவிரி பிரச்சினை, ஆந்திர அரசுகள் தமிழகத்துக்கு வரும் நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பிரச்சினை, மாட்டு இறைச்சி பிரச்சினை உள்பட எல்லா பிரச்சினைகளுக்கு போராட்டம் நடந்தாலும், அரசு தீர்வு காண முன்வரவில்லை.

மத்திய அரசு மாட்டு இறைச்சி பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. இது தனிமனித உரிமையாகும். ஒரு மனிதன் என்ன சாப்பிட வேண்டும் என்று அரசு தீர்மானிக்க கூடாது. விரைவில் தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. ஆட்சி மலர மக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் எம்.பி.துரை, செஞ்சி முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ், மாவட்ட செயலாளர் வேலாயுதம், முன்னாள் கவுன்சிலர் முரளிதரன் உள்பட பா.ம.க.வினர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்