ஏழை எளிய மக்கள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது
‘ஏழை–எளிய மக்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது’ என்று ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் அரிபாபு கூறினார்.
வேலூர்,
‘ஏழை–எளிய மக்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது’ என்று ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் அரிபாபு கூறினார்.
தூய்மை இந்தியா திட்டம்வேலூரில் பா.ஜ.க. சார்பில் பழைய மாநகராட்சி அருகே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் பணி நடந்தது. மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். கோட்ட பொறுப்பாளர் பிரகாஷ், மாவட்ட செயலாளர் பாபு, துணைத் தலைவர் ஜெகன், மண்டல தலைவர் சரவணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவரும், எம்.பி.யுமான அரிபாபு கலந்து கொண்டார். இந்த சுத்தம் செய்யும் பணி பழைய மாநகராட்சி அருகே தொடங்கி வேலூர் தெற்கு காவல் நிலையம், திருப்பதி– திருமலை தேவஸ்தானம், அண்ணாசாலையின் இருபுறங்களிலும் நடந்தது.
இதையடுத்து ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் அரிபாபு வேலூர் டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சாதனையை விளக்கி பா.ஜ.க.வின் எம்.பி.க்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில தலைவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயணம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறுகிறது.
முழு அக்கறைபிரதமர் நரேந்திரமோடி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விபத்து காப்பீடு, கல்வி கடன், விவசாய கடன், எரிவாயு மானியம், பயிர் கடன் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் ஊழல், தீவிரவாதம் போன்றவை குறைந்துள்ளது. மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கவில்லை. இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்று தான் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளை யார் மீறினாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை–எளிய மக்கள், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனில் மத்திய அரசு முழு அக்கறையை செலுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.