செம்பூரில், வீட்டு வாடகை பிரச்சினையில் ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்து கொலை நண்பர் கைது

செம்பூரில், வீட்டு வாடகை பிரச்சினையில் ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-06 21:51 GMT

மும்பை,

செம்பூரில், வீட்டு வாடகை பிரச்சினையில் ஆட்டோ டிரைவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

நண்பர்கள்

மும்பை செம்பூர்கேம்ப், இந்திராநகர் குடிசைப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் பங்கஜ் மிஸ்ரா(வயது30) மற்றும் அம்ருத்குமார்(35). இருவரும் நண்பர்கள். அம்ருத்குமார் ஆட்டோ ஓட்டி வந்தார். இருவரும் வீட்டு வாடகை பகிர்ந்து கொடுத்து வந்தனர். இந்தநிலையில், கடந்த சில மாதமாக அம்ருத்குமார் தான் கொடுக்க வேண்டிய வீட்டு வாடகை தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பங்கஜ் மிஸ்ரா முழு வாடகை தொகையை கொடுத்து வந்து இருக்கிறார்.

இந்த மாத வீட்டு வாடகையை கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று காலை வாக்குவாதம் உண்டானது.

கொலை

இதில் ஆத்திரம் அடைந்த பங்கஜ் மிஸ்ரா, அம்ருத்குமாரை அடித்து உதைத்து கழுத்தை நெரித்தார். இதில் அவர் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் இதுபற்றி செம்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அம்ருத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ராஜவாடி மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, பங்கஜ் மிஸ்ராவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்